×

தேசிய வாக்காளர் தினம் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: ஆணையர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார்

சென்னை:  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பரிசு வழங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுயஉதவிக் குழு மகளிர் ஆகியோருக்கு தேர்தல் குறித்த பாட்டுப் போட்டி, ரங்கோலி போட்டி, சுவரொட்டி தயாரிப்பு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

பாட்டுப் போட்டியில் பள்ளிகள் அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறப்பு பள்ளி மாணவர்கள் என பள்ளி, கல்லூரி, சிறப்புப் பள்ளி என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. சுவரொட்டி தயாரிப்பில் உயர்நிலைப்பள்ளி மற்றும் சிறப்புப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பள்ளி, கல்லூரி, சிறப்புப் பள்ளி என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. பாட்டுப் போட்டிகள் மற்றும் சுவரொட்டி தயாரிப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,000, 2வது பரிசாக ரூ.1,000, 3வது பரிசாக ரூ.500 வழங்கப்பட்டது.

மகளிர் சுயஉதவிக் குழு மகளிருக்கு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2வது பரிசாக ரூ.4000, 3வது பரிசாக ரூ.3000 எனவும், 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1000, வினாடி வினாப் போட்டிகளில் சிறப்புப் பரிசாக 8 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் என மொத்தம் 36 பேருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆணையருமான ககன்தீப் சிங் பேடி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷூ மஹாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜி.குலாம் ஜீலானி பாபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : National Voter's Day Award ,Election ,Contest ,Commissioner ,Gagandeep Singh Bedi , National Voter's Day Award to Winners of Election Awareness Contest: Commissioner Gagandeep Singh Bedi
× RELATED 2024 யூரோ விஷன் பாடல் போட்டியின் புகைப்பட தொகுப்பு ..!!